










திருவள்ளுவர் 2050 - ஆய்வுகள்... அடைவுகள்... | Thiruvalluvar 2050 - Aaivugal… Adaivugal…
Rs.810.00 Rs.900.00
Tags:
திருக்குறள் எழுதப்பட்டு 2,050 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திருக்குறள் தொடர்பான கருத்துக்களையும், திருக்குறள் உரை நுால்களை யும், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளையும் விளக்குவது இந்த நுால். முப்பத்து நான்கு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள முன்னுரை, இந்த நுாலின் தோற்றம் குறித்தும், தமிழ் மொழியின் பழமை குறித்தும், அந்தக் காலத்தில் இருந்த மொழிகள் குறித்தும் எடுத்துரைக்கிறது.
கடந்த, 1921ம் ஆண்டில், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், மறைமலையடிகள் தலைமையில், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஆய்வு செய்து, திருவள்ளுவர் தோன்றிய ஆண்டு, கி.மு., 31 எனக் கண்டறிந்தனர். கி.பி., முதல், இரண்டாம் நுாற்றாண்டு இலக்கியங்களில் திருக்குறள் கருத்துக்கள் முதலானவை இடம் பெற்றிருப்பதை, திருக்குறள் வரலாற்றுக் குறிப்புகள் எனும் தலைப்பில் தெளிவுபடுத்தியுள்ளது இந்த நுால்.
தேர்ந்த 27 தலைப்புகளை அழகுற நிரல்படுத்தி நூலின் உள்ளடக்கமாகக் கொண்டு, தமிழ் இலக்கியப் பேராளுமைகள், மொழி ஆய்வாளர்கள் வல்லுனர்களின் பொருள் பொதிந்த அரிய கட்டுரைகளை அடுத்தடுத்து இடம்பெறச் செய்துள்ளது ஆர்வத்துடன் தொடர்ந்து படித்திடத் தூண்டுவதாக உள்ளது. திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகள், குன்றக்குடி அடிகளார், தொ.பொ.மீ., வ.ஐ.சுப்பிரமணியம், தொ.பரமசிவன், அயோத்திதாசப் பண்டிதர், அமுதன் அடிகள், தனிநாயகம் அடிகள், ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் எழுதிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கங்களைச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.
திருக்குறள் தொடர்பான 2050 காலச் செயல்பாடுகளை இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது. திருக்குறள் தோன்றிய காலத்தை ஆராயும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. திருவள்ளுரின் அறம், அரசியல், அவர் காட்டும் தமிழர் வாழ்வியல், வள்ளுவரின் கடவுள் சிந்தனை ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் கட்டுரைகள், திருக்குறள் சமணம் சார்ந்ததா? புத்த மதம் சார்ந்ததா என ஆராயும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
திருக்குறளில் வைதீகக் கருத்துகள், சைவ சித்தாந்த கருத்துகள், இசுலாமியச் சார்புக் கருத்துகள், கிறிஸ்தவச் சார்புக் கருத்துகள், பகுத்தறிவுச் சார்புக் கருத்துகள் இடம் பெற்றிருப்பதை விளக்கிச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.
"சமனற்ற வளர்ச்சி உள்ள ஒரு சமூக நிலைமையையே குறளில் காணுகிறோம். சமனற்ற தன்மைகளினூடே அடிப்படையான சமூக மாற்றம் ஏற்படும் ஒரு காலகட்டத்தில், அம் மாற்றங்களுக்கான ஒழுங்கான வாய்க்காலை அமைப்பதே குறளின் புலமை முயற்சியாகும்' என்பதை விளக்கும் கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரை, திருக்குறள் தோன்றியதற்கான காரணத்தை விளக்குகிறது.
"திருக்குறளின் அறவியல் சமயச் சார்பற்றது; அது முழுக்க முழுக்க உலகியல் சார்ந்த அறவியலையே முன் வைக்கிறது' என்பதை விளக்கும் ந.முத்துமோகனின் கட்டுரை, பெளத்த மதத்தின் தம்மபதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் திருக்குறளில் இருப்பதை எடுத்துக்காட்டும் மயிலை சீனி.வேங்கடசாமியின் கட்டுரை உள்ளிட்ட பல சிறப்பான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
தொல் பொதுமைச் சமூகத்திற்கு அடுத்த காலத்திற்கும், பின்னைய சித்தர் காலம் தொட்டு முகிழ்த்தெழுந்த பொதுவு டைமைக் கருத்தியல் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவிய தன்னுடைமை, சமூக உடைமை மற்றும் அரசர் உடைமை கொண்டதாக வள்ளுவர் காலச் சமூக நிலை இருந்திருக்கலாம். வள்ளுவம் பெரிதும் தனிமனித ஒழுக்கம், பண்புகள் பேசுவதும் சமூகத்திற்கான சில பொதுப் பண்புகள் குறித்தும் முடிவேந்தர்கள் பண்பு நலன்கள் குறித்தும் விவரித் துள்ளதைக் கட்டுரையாளர்கள் தக்க குறள்களை மேற் கோளிட்டு விரிவாக விளக்கியுள்ளது திருக்குறளின் பன்முகத் தன்மையை முறையாகப் புரிந்துகொள்ள முனைவோருக்கும் நல்ல வழிகாட்டு நூலாக இது உள்ளது.
நூலில் வள்ளுவர் பிறந்த காலம் குறித்தும் வள்ளுவர் படைத்த திருக்குறள் நூலின் பல்வேறு உரைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளிலிருந்தும் திருக்குறள் உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காலவரிசையில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதிலிருந்தும் திருவள்ளுவர், திருக்குறள் குறித்த தொன்மை வரலாற்றை அறிய முடிகின்றது.
பொதுவுடைமைத்தத்துவங்களை ஒட்டிய தன்மையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மார்க்சியத் திற்கு முன்னோடியாக அது தொடர்பான பல்வேறு கருத்தியல் களைத் தாங்கித் திருக்குறள் திகழ்வதாகக் கட்டுரையாளர்கள் சுட்டுகின்றனர். மேலும் பார்ப்பனிய, சனாதனத்திற்கு நேர் எதிரான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் “பகுத் துண்டு பல்லுயிர் ஓம்புதல்” எனச் சொல்லும் பல்வேறு குறட் பாக்களை மேற்கோளாகக் காட்டி நிறுவியுள்ளனர். மேலும் திருக்குறள் மென்மேலும் பெரும் சிறப்புகள் பெறுவதற்கும் உலகம் முழுமைக்குமான பொது நெறிகளை அளிக்கத்தக்கது என்பதற்கும் இன்னும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதையும் வலியுறுத்திக் கட்டு ரைகள் பேசுகின்றன.
நூலின் உள்ளடக்கம் தமிழ்மொழி இலக்கியம் சார்ந்தோர் பயனுக்குக்கானது என்பது மட்டுமின்றி, பொதுவாகப் பல்துறை சார்ந்த கல்வியாளர்களும், குறிப்பாகச் சமூக அறிவியல், மானுடவியல் துறைக் கல்வியாளர்களும் விரிவாகப் படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளது. நூலின் பல கட்டுரைகள் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளத்தக்க தலைப்புகளைத் தரத்தக்கவையாக உள்ளன.
எனவே அனைத்துத்துறை மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து மக்களும் படித்து பயன்பெற வேண்டிய நூலாகும். தமிழ் இலக்கியம் குறிப்பாகக் குறள் இலக்கியம் படிப்போ ருக்கு இந்நூல் ஒரு துணை நூலாக அமையத் தக்கது. ராயல் அளவு எனும் புத்தக அளவில் அமைந்துள்ள இந்த நுாலின் அச்சு அமைப்பும், வடிவமைப்பும் புத்தகத்தை எடுத்தவுடன் படிக்கச் சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன.
Choose Quantity
Specifications
நூல் விவரங்கள் / Product Details
- Book Conditionபுதிய நூல்
- பக்கங்கள்984
- Binding TypeHardcover
- எடை (கிராம்)1480
- நூல் அளவுRoyal - 234 x 156mm
- படைப்பாசிரியர் / தொகுப்பாசிரியர்தோழர் பொழிலன்
- மொழிதமிழ் நூல்கள்
- Edition number1
- முதற்பதிப்புதி. பி. 2050, கடகம் 27 [ 2019-08-12 ]
- பதிப்பகம்பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
- Publisher Addressபாவலரேறு தமிழ்க்களம், மேடவாக்கம் கூட்டுச் சாலை அருகில், சென்னை, தமிழ்நாடு, 600100.
- Publisher Contact / eMail+91 86080 68002, +91 90929 48002
- Book Categoryதிருக்குறள்
- Book Sub-categoryஇலக்கிய ஆய்வுரைகள்