பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களுள் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரின் செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகின்றன. இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். சொந்த ஊர் சேலம் மாவட்டம், சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்துத் துரை. மாணிக்கம் எனத் தொடக்கக் காலத்தில் அழைக்கப்பெற்றவர். பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் மாணவர் பருவத்தில், "குழந்தை' என்னும் பெயரில் கையெழுத்து ஏடு தொடங்கி நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் "மலர்க்காடு' என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர். கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்திற்கு முன்னரே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்த, அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். பாவாணர் அவர்களைச் சிறப்பாசிரியராக அமர்த்திடும் தன் விருப்பத்தின்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959 - இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார்.
தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பா இயற்றும் ஆற்றலால் இதழை நடத்திய பெருஞ்சித்திரனார், அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில்தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. இவர் எழுதிய பாடல்களும் கட்டுரைகளும் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப்பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது. சிறைசென்றதால் அரசுப்பணியிலிருந்து நீக்கம் செய்யப்பெற்றார்.. எனவே, முழுநேரமாக இயக்கப் பணியாற்றினார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார். சிறையில் இருந்து வெளிவந்த, பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாடல்களையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.
பாவாணரின் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தைத் தோற்றிவைத்து அதில் பொதுச்செயலராக இணைந்து பணியாற்றினார். அதுபோல் பாவாணர் அவர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்திடும் வகையில் பெருந்திட்டம் அமைத்துக் கொடுத்திட்ட வகையில் உதவினார். தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 1972இல் திருச்சியில் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு எனும் தமிழக விடுதலை மாநாடு ஒன்றை நடத்தினார். 1973 இல் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு இரண்டாவது மாநாடு மதுரையில் நடத்த முயன்ற பேரணி தொடக்கத்திலேயே சிறை செய்யப்பட்டார். பின்னர் 1975 தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மூன்றாவது மாநாட்டைச் சென்னையில் நடத்த முனைந்தபோது இருபத்துஇரண்டு பேருடன் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டு மாதக் கணக்கில் சிறையிலடைக்கப்பட்டார்.. அதன்பின்னர் தமிழ்நாடு விடுதலை கேட்டார் என்பதற்காக மிசா – கொடுஞ் சிறையில் ஓராண்டு அடைக்கப்ட்டார்.
தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. மொழித்தளத்தில் தனித்தமிழ்க் கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையையும் கொண்டவர் ஆவார். இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்படுத்தப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டுக் கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.
இளைஞர்களின் செயற்திறனை வளர்க்கும் வண்ணம் தனது படிப்பறிவையும் பட்டறிவையும் சான்றாய் வைத்துச் சிறந்த பல கட்டுரைகளையும் நூற்களையும் ஆக்கியவர். பெருஞ்சித்திரனார் தன் மொழிவழி முன்னோடியர்களான தனித்தமிழ் அறிஞர்களிடமிருந்து தீவிரமாக வேறுபடும், முரண்படும் புள்ளி அவரின் தனித்தமிழ் நாட்டு விடுதலை அரசியலாகும். பெருஞ்சித்திரனார் 1981 இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982 இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார். 1988 இல் செயலும் செயல்திறனும் என்னும் நூல் வெளிவந்தது.
தமிழீழப் போராட்டத்திற்கு முழுமையாக அதன் தொடக்கக் காலந்தொட்டே உதவினார் என்பதற்காகத் தடா - கொடுஞ்சட்டத்தின்வழி மட்டுமன்றிப் பலமுறை சிறைப்படுத்தப்பட்டார். எண்ணற்ற ஆய்வு நூல்களை இடையிடையே எழுதிவந்தார்.. சாதி ஒழிப்பை எழுத்தோடு நிறுத்தாமல் அதற்காகப் போராடியதோடு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் சாதிமறுப்புத் திருமணங்களையே செய்துவைத்தார்.
மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995 இல் இயற்கை எய்தினார். இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் "பாவலரேறு தமிழ்க்களம்' என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி, தமிழக வரலாற்றில் அளப்பரும் பணிகளைச் செய்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வாழ்வும், படைப்புகளும், இதழ்களும் விரிவாக ஆராயப்பட வேண்டுவனவாகும்.